Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 20-ல் அறிமுகம்: சீமான்

சென்னையில் வரும் மார்ச் 20-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இக் கட்சியின் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் சீமான் தலைமையில் கோவையில் நேற்று நடைபெற்றது. மேற்கு மண்டலத்தில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். தலா 117 ஆண்கள், பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ல் சென்னையில் நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்படுவர். நான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதையும் அப்போது அறிவிப்பேன்.

இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு ஆகியவை அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது அதையே பேசுகின்றனர். தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன் நாங்கள்தான் முதலில் கையில் வேல் எடுத்தோம். இப்போது பாஜக-வும், திமுக-வும் கையில் வேல் எடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் இதை செய்யவில்லை?

நாடு முழுவதும் பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி, தென் மாநிலங்களில் தனது இருப்பைத் தக்கவைக்க முயற்சி செய்கிறது.

தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், பாஜக கண்டுகொள்ளாது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவரைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொடமுடியாது.

நாம் தமிழர் கட்சிக்கென்று தனி கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, மக்களிடம் வாக்கு கேட்போம். இவ்வாறு சீமான் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x