Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.50.30 கோடி மதிப்பில் மேற்கு புறவழிச்சாலை சட்டப்பேரவை துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார்

பொள்ளாச்சியில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.50.30 கோடி மதிப்பில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று தொடங்கிவைத்தார்.

வெளிமாநில கனரக வாகனங்கள் நகரின் உள்ளே வராமல், ஆச்சிபட்டி, ஆர்.பொன்னாபுரம், ஜமீன் ஊத்துக்குளி வழியாக கேரளா எல்லையை அடையும் வகையில் 9 கிலோமீட்டர் தொலைவுக்கு இருவழிப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.50.30 கோடி மதிப்பில் நடைபெற உள்ள இந்தப் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அடிக்கல் நாட்டிவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தாமோதரன், சார் ஆட்சியர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, "மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். மேலும், பொள்ளாச்சியிலிருந்து கேரள மாநில எல்லை வரை ரூ.70 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. கோவையை அடுத்த வெள்ளலூரில் ரூ.500 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் விரைவில் நிறைவடைய உள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் பொள்ளாச்சியிலிருந்து வெள்ளலூருக்கு சாலை அமைக்கப்படும். பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில், 9 மாடிகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடத்தில் ஐந்து மாடிகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் 2,500 பேருக்கு படுக்கை வசதி கொண்ட பொது சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், கர்ப்பிணிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ரூ.30 கோடி மதிப்பில் 6 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

அதில் 3 மாடிகளுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் 100 தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதே போல, 100 பச்சிளங் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கக் கூடிய அதிநவீன வசதிகள் உள்ளன. தமிழ்நாடு-கேரளா மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம், ஆனைமலை-நல்லாறு திட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x