Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM

புதைசாக்கடையிலிருந்து ஒரு வாரமாக சாலையில் வெளியேறிய கழிவுநீர் கும்பகோணத்தில் எம்எல்ஏ போராட்டத்தால் சீரமைப்பு

கும்பகோணத்தில் கடந்த ஒரு வாரமாக புதை சாக்கடை கழிவுநீர் வழிந்தோடிய நிலையில், எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டதால் உடனடியாக சீரமைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் 40-வது வார்டு மகாமக குளம் காந்தியடிகள் சாலையில் கடந்த ஒரு வாரமாக புதை சாக்கடையிலிருந்து கழிவுநீர் வழிந்தோடி வந்தது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், வங்கிகள், குடியிருப்புகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதுதொடர்பாக, நகராட்சியிடம் பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டும், கழிவுநீர் வெளியேறுவது சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தொகுதி எம்எல்ஏவான சாக்கோட்டை க.அன்பழகனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சு.ப.தமிழழகன் ஆகியோர், அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அங்கு சாலையிலேயே நாற்காலியில் அமர்ந்து எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்களிடம், புதைசாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து சீரமைக்கும் வரை இந்த இடத்தைவிட்டுச் செல்ல மாட்டேன் என எம்எல்ஏ தெரிவித்தார். பின்னர், 30 நிமிடங்களில் தொழிலாளர்கள் வந்து ஒரு மணிநேரம் போராடி கழிவுநீர் வெளியேறுவதைத் தடுத்து சீரமைத்தனர்.

இதுகுறித்து எம்எல்ஏ கூறியதாவது: கும்பகோணம் நகரில் பல இடங்களில் புதைசாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதைசாக்கடை அடைப்பை சீரமைக்க நகராட்சியால் வாங்கப்பட்ட நவீன இயந்திரம் என்னவானது என தெரியவில்லை. நகராட்சி அதிகாரிகளிடம் குறைகளை சொன்னால் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். இந்தச் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியபோது, 10 நாட்களில் முடித்துவிடுகிறோம் என்றனர். ஆனால், உடனடியாக சீரமைத்தால்தான் இங்கிருந்து செல்வேன் என நான் கூறியதால், பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x