Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

நாகை நம்பியார் நகர் கிராமத்தில் ரூ.34.30 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் கட்ட பூமி பூஜை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கிவைத்தார்

நாகை நம்பியார் நகர் கிராமத்தில், ரூ.34.30 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கான பூமிபூஜையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

நாகை நகராட்சிக்குட்பட்ட நம்பியார் நகர் மீனவ கிராமத்தில், ரூ.34.30 கோடி மதிப்பில் புதிய சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக கட்டுமானப் பணி, நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், வெட்டாற்றின் வடபுறக்கரையில் ரூ.19.87 கோடி மதிப்பில் 360 மீட்டர் நீளத்துக்கு நேர்கல் சுவர் அமைத்து, வெட்டாற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி ஆகிய வற்றுக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார்.

பூமிபூஜையை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:

நாகை நம்பியார் நகரில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட உள்ள துறை முகத்தில், படகு இறங்கு துறை, படகு அணையும் சுவர், அலைத்தடுப்புச் சுவர்கள், கடற்கரை இணைப்பு அமைப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதற்காக, முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

இதேபோல, நாகூர் பட்டினச் சேரியில் வெட்டாற்றின் வடபுறக் கரையில் 360 மீட்டர் நீளத்துக்கு நேர்கல் சுவர் அமைத்து, வெட்டாற்றின் முகத்துவாரம் ஆழப் படுத்தப்பட உள்ளது. இப்பணி நிறைவு பெற்றால் மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டத்தால் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள். தற்போது மாவட்டத்தில் மழை நின்றுவிட்டது. வயல்களில் தேங்கிய தண்ணீரும் வடியத் தொடங்கிவிட்டது. பாதிக் கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவா ரணத் தொகையை முதல்வர் அறிவிப்பார். எனவே, விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது குறித்து, தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் பார்க்கலாம்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும், எதற்கு வேண்டும் என்றாலும் ஆசைப் படலாம். அதனால்தான் நடிகர் ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வர ஆசைப்பட்டுள்ளார் என்றார்.

முன்னதாக நடைபெற்ற விழாவில், நாகை எம்.பி எம்.செல்வராஜ், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் தங்க.கதிரவன், மீன்வளத் துறை உதவி செயற்பொறியாளர் முரு கேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x