Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி 1,200 காலி பணியிடங்களுக்கு 561 பேர் மட்டுமே தேர்வு மீதமுள்ள இடங்களையும் நிரப்ப தேர்வர்கள் வேண்டுகோள்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 561 பேர் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவியில் (சிறப்பாசிரியர்) 663 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 23.9.2017 தேதியில் போட்டித் தேர்வை நடத்தியது.

அத்தேர்வின் முடிவுகள் 14.6.2018 தேதியில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 13.8.2018 அன்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றன. கல்வித் தகுதி தொடர்பாக, உயர் நீதிமன்றங்களில் (மதுரை, சென்னை) பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு விசாரணைகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று முடிவுக்கு வந்தன.

இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ள 561 பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அக். 28-ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இவர்கள் அனைவரும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வானவர்கள். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்றும், இன்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடைபெறுகிறது என பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவிகளில் 1,200-க்கும் மேற்பட்ட இடங்கள் நீண்ட காலமாக காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுவரை உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதுதான் முதல்முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக போட்டித் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசு, பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால் காலியாகவுள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் இப்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள தேர்வின் தேர்ச்சி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் இதனால் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கலாம் என்றும் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு எழுதியுள்ள தேர்வர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தையல், ஓவியம், இசை

இதேபோல், ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் காலியாகவுள்ள கூடுதல் இடங்களையும் அந்த பணிகளுக்கு நடத்தி முடிக்கப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புமாறு அத்தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x