Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்கினர் :

பட்டப்பகலில் கத்தியுடன் சுற்றிய இளைஞர்களை தாம்பரம் போலீஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு தாம்பரம், ஜிஎஸ்டி, சாலையில் உள்ள பழைய செக்போஸ்ட் அருகே தாம்பரம் போலீஸார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 5 இளைஞர்கள் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சக போலீஸார் உதவியுடன் விரட்டிச் சென்று பிடித்தார். ஒருவர் தப்பிவிட்டார்.

பிடிபட்டவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது, ஓர் இளைஞரின் இடுப்பில் ஒன்றரை அடி நீளமுள்ள பட்டா கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட 4 இளைஞர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள், புது பெருங்களத்தூரை சேர்ந்த தங்கதுரை(20), நெடுங்குன்றத்தை சேர்ந்த அலன்ராஜ் (26), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த பிரதீப்(21), குரோம் பேட்டையை சேர்ந்த லோகேஷ்வரன்(25) என்பது தெரியவந்தது.

நால்வரும் பெயின்டிங் மற்றும் எலக்ட்ரிகல் வேலை செய்து வருவதும், லோகேஷ்வரன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், மற்றவர்கள் மீது தாம்பரம் காவல்நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. மேலும் காதல் விவகாரத்தில் ஓர் இளைஞரை மிரட்ட பட்டா கத்தியுடன் சென்றதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்த கத்தி, 2இருசக்கர வாகனங்கள், போதைமாத்திரை மற்றும் ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் ‘ட்விட்’

பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்தஇளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானது. இதைக் கண்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தாம்பரத்தில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ள சம்பவம், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் ‘அமைதிப் பூங்கா' என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு உதாரணம். அதிமுக அரசுஅளித்தது போல், போலீஸாருக்குமுழு சுதந்திரத்தை திமுக அரசும்வழங்க வேண்டும்" என பதிவிட்டுஉள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x