Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் சிக்கினர் :

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரஞ்சேரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(22). இவர், வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் பச்சைக்குத்தும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சதீஷிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,200 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தோட்டப்பாளையம் - சிஎம்சி சாலை வழியாக தப்பிச்சென்றனர்.

அந்த சமயத்தில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தனது வாகனத்தில் வேலூர் அண்ணாசாலை வழியாக செல்ல தோட்டப்பாளையத்தை கடந்தார். அப்போது, சிஎம்சி சாலை வழியாக ஒரே இரு சக்கர வாகனத்தில் கையில் கத்தியுடன் 3 இளைஞர்கள் வாகனத்தில் கூச்சலிட்டபடி சென்றதை பார்த்த எஸ்.பி., செல்வகுமார் அவர்களை மடக்கிப்பிடிக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார். சிஎம்சி அவுட் கேட் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை மடக்கினர். காவல் துறையினரை கண்டதும், இரு சக்கர வாகனத்தில் இருந்து 2 பேர் குதித்து ஓடினர்.

அவர்களை எஸ்.பி.,யின் பாதுகாவலர் (கன்மேன்) சதீஷ்குமார் விரட்டிச்சென்று 2 பேரை துப்பாக்கி முனையில் பிடித்தார். விசாரணையில், பிடிபட்டவர்கள் 17 வயதுள்ள சிறுவர்கள் என்பதும், அவர்கள் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் வடக்கு காவல் துறையினர் விரைந்து வந்து 2 சிறுவர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்டு கத்தியுடன் தப்ப முயன்ற 2 சிறுவர்களை விரட்டிச்சென்று பிடித்த எஸ்.பி., பாதுகாவலர் சதீஷ்குமாரை பாராட்டிய எஸ்.பி., செல்வகுமார் அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x