Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற - விளைநிலங்களை வீடாக்குவதை தடை செய்ய வேண்டும் : குமரி ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

‘குமரி மாவட்டத்தில் வரும் காலங்களில் மழை,வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற விளைநிலங்களை வீடாக்குவதை த டைசெய்ய வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12, 13-ம் தேதிகளில் பெய்த கனமழையால் வயல் வெளிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மக்கள் உயிரை காப்பாற்ற பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

பழையாறு உட்பட ஆற்றங்கரையோரம், கால்வாய், குளக்கரை பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததுடன், சாலைகளும் துண்டிக்கப்பட்டன.

விளை நிலங்கள், வயல்களை வீட்டு மனைகளாக மாற்றியது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது ஆகியவையே வெள்ளப் பாதிப்புக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செண்பகசேகர பிள்ளை மற்றும் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திடம், கோரிக்கை மனு அளித்தனர்.

பயிர்களுக்கு இழப்பீடு

அதில், குமரியில் ஏற்பட்ட கனமழையால் பாசனப் பரப்பில் அடித்துச் செல்லப்பட்ட வரப்புகள் மற்றும் பெரும் பள்ளங்கள், மணல் திட்டுகள் மற்றும் உருமாறிய ஊட்டுக் கால்வாய்களை சீர்செய்ய விவசாயிகளுக்கு அரசு உதவிட வேண்டும்.

பல ஆண்டுகளாக டெல்டா விவசாயிகளுக்கு வழங்கி வரும் இடுபொருள் தொகுப்பை குமரி மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும். தேங்கிய மழைநீரால் அழுகிய நெல் நாற்றுகள், மரச்சீனி, இஞ்சி போன்ற பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

குளங்கள் சீரமைப்பு

இனி வரும் காலங்களில் மழையால் ஏற்படும் வெள்ளம் விளை நிலங்களுக்குள்ளோ, ஊர்களுக்குள்ளோ புகுந்து சேதம் ஏற்படாதவாறு அனைத்து நீர் ஆதாரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, தூர்வாரி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை முற்றிலும் தடை செய்ய உரிய விதிமுறைகளை உருவாக்கி அதை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வீடுகட்ட அனுமதி வழங்கும்போது உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த பகுதிகளின் பூகோள அமைப்பை கணக்கில் கொண்டு கட்டுமான விதிகளை விஞ்ஞான அடிப்படையில் உருவாக்க வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையின் போது பெருக்கெடுக்கும் வெள்ளம் சமவெளி பகுதிக்கு வராத வகையில் 385 மானாவாரி குளங்களையும் சீர்செய்து தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவின் ஆய்வில் உள்ள உலக்கை அருவி, மாங்காமலை ஓடை, உள்ளிமலை ஓடை உள்ளிட்ட 36 பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

நாகர்கோவில் நகரம், சுசீந்திரம் உட்பட முக்கிய பகுதிகளின் மழைநீர் வடிகாலாக விளங்கி வரும் பழையாற்றின் சீரமைப்பு பணிகளை காலம் கடத்தாமல் தொடங்கி வெள்ளப்பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x