Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் சேவை தொடங்க - தண்டவாளம் சீரமைப்பு பணிகள் தீவிரம் :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மலை கிராமங்கள் மற்றும் நகர, கிராமப்புற சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களாக இம்மாவட்டத்தில் மழை நின்று வெயில் அடித்து வருகிறது. இதனால் வெள்ளஅபாயம் நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. சேதமான விவசாய நிலங்கள், சாலை, ரயில் தண்டவாளங்கள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மழை இல்லாமல் இருந்தால் இன்னும் 3 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வடிந்துவிடும் சூழல் நிலவுகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.37 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,891 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,757 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 74 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,899 கனஅடி தண்ணீர் வருகிறது. 3,192 கனஅடி தண்ணீர் உபரியாக செல்கிறது. சிற்றாறு அணை அடைக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பி வருவதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர். மோதிரமலை உட்பட குமரி மலைகிராமங்களில் வெள்ளத்தால் சூழப்பட்ட சாலைகளில் போக்குவரத்து சீரானது. அதேநேரம் குற்றியாறு, கரும்பாறை உட்பட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நிலை இயல்புக்கு வரவில்லை.

நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் ரயில் பாதைகளில் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டி ருந்தது. இதைப்போல நாகர்கோவில் அருகே வில்லுக்குறி இரட்டைகரை சானலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் பேயன்குழி, நுள்ளிவிளை ரயில் தண்டவாளத்தில் புகுந்ததால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாள பகுதிகள் ஆறுபோல் மாறியிருந்தன. இதனால் நேற்று 5-வது நாளாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. தண்ட வாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் இரு நாட்களில் திருவனந்தபுரத்துக்கு ரயில் சேவை தொடங்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x