Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM

திருடிய மாட்டை ஆன்லைன் மூலம் விற்க முயன்ற கும்பல் : கன்றுக் குட்டிகளுடன் 3 மாடுகளை மீட்ட போலீஸார்

காரைக்குடி அருகே திருடிய மாட்டை ஆன்லைன் மூலம் விற்க முயன்ற கும்பலிடம் இருந்து கன்றுக்குட்டிகளுடன் 3 மாடுகள் மீட்கப்பட்டன.

காரைக்குடி அருகே செட்டிநாட்டு காவல் நிலையம் அருகே வசிப்பவர் ரமேஷ்(50). அர்ச்சகர். இவர் வீட்டில் கன்றுக்குட்டிகளுடன் 2 மாடுகளையும், சினையுடன் ஒரு மாடும் வளர்த்து வந்தார். அவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம். கடந்த அக்.12-ல் மாடுகள் திருடு போயின. போலீஸாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், ரமேஷ் பல்வேறு இடங்களில் தேடி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் கன்றுக்குட்டியுடன் ஒரு மாடு விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்பு வந்தது. அதில் இருந்த மாட்டின் புகைப்படத்தை பார்த்து தனது மாடுதான் என ரமேஷ் உறுதி செய்தார். மேலும் சினையாக இருந்த அந்த மாடு கன்றை ஈன்றுள்ளது. இதனால் கன்றுக் குட்டியுடன், மாட்டை விற்பதாக அறிவித்திருந்தனர்.

இது குறித்து ரமேஷ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் யோசனைப்படி ரமேஷ், அந்த மாட்டை வாங்கிக் கொள்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தவர்களிடம் மொபைல் எண்ணில் தெரிவித்தார். இதையடுத்து அக் கும்பலைச் சேர்ந்தவர்கள் திருப்பத்தூரை அடுத்த கம்பனூர் அருகே கொங்கறுத்தியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்துக்கு வரு மாறு ரமேஷிடம் கூறினர்.

அங்கு ரமேஷ் மற்றும் போலீ ஸார் சென்றபோது அவரிடம் திருடப்பட்ட மூன்று மாடுகளும், அதன் கன்றுக்குட்டிகளும் இருந்தன. ஆனால், அந்த கும்பல் தலைமறைவானது. தோட்டக்காரர்களிடம் விசாரித்தபோது, மூன்று பேர் இங்கு வந்து கன்றுக்குட்டிகளுடன் மாடுகளை விட்டுச் சென்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கன்றுக் குட்டி களுடன் 3 மாடுகளையும் போலீ ஸார் மீட்டனர்.

போலீஸார் விசாரணையில், மாடுகளை திருடி விற்க முயன்றது காரைக்குடி கழனிவாசல் மற்றும் குன்றக்குடியைச் சேர்ந்த இருவர் எனத் தெரியவந்தது.

அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x