Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM

தொழில் முனைவோர் கருத்தரங்கம் :

நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் நேற்று நடந்த தொழில்முனைவோருக்கான ஏற்றுமதி கண்காட்சியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள் மற்றும் தொழில் முனைவோர் பிற மாவட்டத்தை விட அதிகமாக உள்ளனர் என நாகர்கோவிலில் தொழில் முனைவோர் கண்காட்சியை திறந்து வைத்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசினார்.

வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநரகம், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், மாவட்ட தொழில் மையம் ஆகியவை சார்பில், ஏற்றுமதி தொடர்பாக தொழில்முனைவோர் சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அளவில் இடவசதி இல்லை. ஆனால், படித்தவர்கள் மற்றும் தொழில் முனைவோர் அதிகமாக உள்ளனர். இவர்களை ஒன்றிணைத்து, இங்குள்ள இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் முறையான வளர்ச்சியை எட்டுவற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இங்கு கிடைக்கும் பொருட்கள், பாரம்பரியமாக நமது மக்களிடையே இருக்கக்கூடிய திறன்களைக் கொண்டு, பல அமைப்புகள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

மேலும், பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் உலகத் தரத்துக்கு ஏற்றபடி உற்பத்தி செய்கிறார்களா? என்பது குறித்தும் வல்லுநர்களை கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

கோட்டாட்சியர் சேதுராமலிங் கம், நபார்டு வங்கி மேலாளர் சைலேஷ், இந்து கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு, முன்னோடி வங்கி மேலாளர் ராம்குமார் மற்றும் தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x