Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

பெருமாள் கோயில் சொத்துகளை மீட்கக்கோரி கிராம மக்கள் தர்ணா :

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் பெருமாள் கோயில் சொத்துகள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 5-ம் தூண் நிறுவனத் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவர் தம்பா, துணைத்தலைவர் மாரியம்மாள், நாட்டாமை மாரியப்பன் மற்றும் கிராமமக்கள் இதில் பங்கேற்றனர்.

கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் அவர்கள் வழங்கிய மனு விவரம்:

கட்டாலங்குளம் கிராமத்தில் சுமார் 650 ஆண்டு கால பழமையான பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பூஜை மானியமாக சுமார் 43 ஏக்கர் நிலமும், ஒரு குளத்து பாசனமும் அதன் மீன் பாசி வருமானமும் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டு வரை கோயில் சொத்துகள் அனைத்தும் சுவாமி பெயரிலேயே இருந்து வந்துள்ளது என்று அரசு ஆவணங்களின் படி தெரியவருகிறது. கடந்த 1960-ம் ஆண்டிலிருந்து கோயில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை கூட பூஜை நடத்தப்படுவதில்லை. பக்தர்களை சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிப்பதில்லை.

தற்போது புரட்டாசி மாதத்திலும் கோயிலுக்குள் பூஜை நடத்தப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கோயிலையும், கோயிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளையும் மீட்டுத் தரவேண்டும். கோயிலில் வழக்கமான பூஜைகள் நடக்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், ‘கட்டாலங்குளத்தில் மாதத்தில் சுமார் 25 நாட்களுக்கு மேலாக மின்தடையால் கிராமம் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே, கட்டாலங்குளம் மின் வழித்தடத்தில் உள்ள அனைத்து பழுதடைந்த வயர்களையும் மாற்றம் செய்து, தொடர் மின் தடை ஏற்படுவதை தடுத்து நிறுத்தி சீராக மின்சாரம் வழங்க வேண்டும்’, எனக் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x