Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM

தரவுத் தளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய வேண்டும் : செயலாக்கக் குழு கூட்டத்தில் தருமபுரி ஆட்சியர் தகவல்

தேசிய தரவுத்தளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கான பிரதம மந்திரி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான செயலாக்கக் குழுவின் முதல் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு, ஆட்சியர் திவ்யதர் சினி தலைமை வகித்து பேசியதாவது:

அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத் தளம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள், சுய உதவிக் குழுக்கள், சில்லரை வணிகர்கள், சுய தொழில் செய்வோர், ரிக்‌ஷா ஓட்டுநர், வீட்டு வேலை பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட 150 வகை தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் குறித்த தரவுகளை தேசிய தரவுத் தளம் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதன் மூலம் மத்திய அரசின் சலுகைகள் அவர்களுக்கு நேரடியாகக் கிடைக்கும். இதற்காக, ஒவ்வொரு பொது சேவை மையங்களிலும் கட்டணமின்றி தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பின்னர் ஒவ்வொரு தொழிலாளருக்கும் யுஏஎன் என்ற 12 இலக்க எண் வழங்கப்படும். இந்த தொழிலாளர்கள் சூழல்கள் காரணமாக புலம்பெயர நேர்ந்தாலும் கூட இந்த எண் உதவியால் அவர்களுக்கு அரசின் சலுகைகள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும், தொழிலாளர்களின் தொழில் திறமையை வகைப்படுத்தி அதற்கேற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த தரவுத் தள விவரங்கள் உதவியாக அமையும்.

ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண், வங்கிக் கணக்கு எண், வயது வரம்பு சான்று (18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்) ஆகிய விவரங்களுடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில பொது இ-சேவை மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். அதேநேரம் இஎஸ்ஐ, இபிஎப், என்பிஎஸ் மற்றும் வருமான வரி செலுத்துவோர் இத்திட்டத்தில் சேர முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தொழிலாளர் நல உதவி ஆணையர் இந்தியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x