Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்த வலியுறுத்தி மநீம மனு :

தருமபுரி மாவட்டத்தில் முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவில், ‘கிராம சுயாட்சி என்ற மகாத்மா காந்தியின் கனவு நிறைவேற மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் பல்வேறு களப்பணிகள், கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக, கிராம ஊராட்சி அமைப்பின் வேரான கிராம சபை விழிப்புணர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். அரசமைப்பு மற்றும் ஊராட்சி சட்டங்களின்படி இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கிராம சபைக் கூட்டம் நடப்பது தொடர்பாக 7 நாட்களுக்கு முன்பாக அழைப்பு தர வேண்டும். கூட்டத்தின்போது, ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் முறையாக தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும். கிராம சபை முடிவுற்றதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நகல் கேட்போருக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். தீர்மானங்கள் நிறைவேற பங்கேற்க வேண்டிய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். கிராம சபைக் கூட்டங்களை வீடியோ, புகைப்பட வடிவில் ஆவணப்படுத்த வேண்டும். சபை உறுப்பினர்கள் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சுழற்சி முறையில் நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x