Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு : சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையில் விரைவில் ரசாயன கலவை பூசுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என, அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கன்னியாகுமரி, முட்டம், சிற்றாறு அணை, பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட இடங்களைஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, கடந்த ஆட்சியில் பராமரிக்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படவில்லை. இப்பணி விரைவில் தொடங்கும். திருவள்ளுவர் சிலையை இரவிலும் மின்னொளியில் கண்டுகளிக்கும் வகையில், சிலையின் முகப்பில் நவீன தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளியுடன் கூடிய லேசர் லைட் அமைக்கப்படும். முக்கடல் சங்கமத்தில் கேபிள் கார் வசதி செய்துதரப்படும்.

தமிழக சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து, கரோனா 3-வது அலை தாக்கத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும். சுற்றுலா தலங்களில் உள்ள வியாபாரிகளின் துயர் துடைக்க கடனுதவிகள் வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இணைத்து சுற்றுலா பேருந்து வசதி ஏற்படுத்தப்படும். கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி வரை கடல் வழியாக சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்ய சுற்றுலாத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உடனி ருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x