Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

தெற்குகள்ளிகுளம் - அதிசய பனிமாதா பேராலய விழா கொடியேற்றம் :

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதாபேராலயத்தின் 136-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் இவ்வாண்டுக்கான திருவிழா அரசு வழிகாட்டுதலின்படி நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் தொடக்கமாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து குருவானவர்களை பங்குமக்கள் பாரம்பரிய முறையில் அழைத்து வந்தனர். பரிசுத்த அதிசயபனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ஆலய தர்மகர்த்தா எம்.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் ஆலயத்தின் உள்ளிருந்து எடுத்து வந்தனர். அக் கொடியை அருட்தந்தையர்கள் ஜெகதீசு, பீட்டர் பாஸ்டின், ரூபன், ரினா ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் புனித கொடியை தர்மகர்த்தா ஏற்றினார்.

இதைத் தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. திருவிழாவையொட்டி அதிசய பனிமாதா பேராலயம் மற்றும் கொடிமரம் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. வரும்ஆகஸ்ட் 2-ம் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமிதலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. அடுத்தநாள் 8-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் பிரிட்டோ தலைமையில் நடைபெறும் திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு தூத்துக்குடிமறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கோயிலுக்குள் நற்கருணை பவனி நடைபெறுகிறது.

விழாவின் 9-ம் நாளான ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு மாலைஆராதனை நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், நள்ளிரவு 12 மணிக்கு பனிமாதாவின் அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி காலை5.15 மணிக்கு சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x