Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டும் நெடுஞ்சாலையோர விவசாயிகள் :

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டி அருகே விளை நிலத்தில் அறுவடையை எட்டும் நிலையில் வளர்ந்து நிற்கும் பீட்ரூட் செடிகள்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோர விவசாயிகள் சிலர் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி-அரூர் சாலை, தருமபுரி-ஒகேனக்கல் சாலை, தருமபுரி-பாலக்கோடு சாலை என பிரதான சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் சிலர் இங்கிலீஷ் காய்கறிகள் என்று அழைக்கப்படும் மேலைநாட்டு வரவுகளான பீட்ரூட், கேரட் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். பீட்ரூட், கேரட் வகை காய்கறிகள் மலைப்பிரதேசங்கள் உள்ளிட்ட குளிர்ந்த காலநிலை கொண்ட நிலப்பரப்புக்கு மட்டுமே ஏற்ற பயிர் என்ற நிலை மாறி இயல்பான இதர பகுதிகளிலும் விளையும் என்பதை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அந்த நம்பிக்கையிலும், விற்பனை வாய்ப்பு எளிதாக அமைவதாலும் சாலையோர விவசாயிகள் தற்போது பீட்ரூட், கேரட்டை பயிரிட்டு வருகின்றனர்.

தருமபுரி-ஒகேனக்கல் சாலை யில் நாகதாசம்பட்டி பகுதியில் ராமனூர் கிராம விவசாயிகள் சிலர் பீட்ரூட் சாகுபடி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பீட்ரூட் நடவு செய்து விற்பனையில் ஈடுபடும் சாரதா என்ற விவசாயி கூறியது:

எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் நிலக்கடலை, நாட்டுக் காய்கறிகள் போன்ற பயிர்களைத் தான் காலம் காலமாக சாகுபடி செய்வோம். சில ஆண்டுகளாகத் தான் நிலத்தின் ஒருபகுதியில் கேரட் நடவு செய்து பார்த்தோம். எங்கள் மண் வளத்துக்கு கேரட் விளைந்தபோதும் கிழங்குகள் குறைந்த நீளம் கொண்டவையாகவே இருந்தன. அதனால் பீட்ரூட் சாகுபடியை முயற்சி செய்து பார்த்தோம். மணல் தன்மை கொண்ட செம்மண் பூமியான எங்கள் நிலத்தில் பீட்ரூட் நன்றாகவே விளைந்தது. நடவு செய்த மூன்றரை மாதத்துக்குள் அறுவடை முடித்து விடலாம். பீட்ரூட் பயிருக்கு மண்ணில் ஈரம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலையோரம் வீடு இருப்பதால் வீட்டுக்கு அருகி லேயே கடை அமைத்து விற்பனை செய்கிறோம். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கிழங்குகளை பறித்து வந்து புத்தம் புதிதாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் விருப்பத்துடன் எங்களிடம் பீட்ரூட் கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்கிறோம். மொத்த வியாபாரத்துக்கு அனுப்பும் வகையில் அதிக நிலப்பரப்பில் நாங்கள் சாகுபடி செய்வதில்லை. அதேநேரம், இப்பகுதி பீட்ரூட் விவசாயிகள் அனைவருமே நிலத்தின் ஒரு பகுதி அறுவடை முடியும்போது மற்றொரு பகுதி அறுவடைக்கு வந்துவிடும் வகையில் நாட்கள் இடைவெளி அமைத்து நடவு செய்கிறோம். குடும்ப செலவினங்களை சமாளிக்க ஏற்ற வகையில் பீட்ரூட் சாகுபடி மூலம் தினமும் ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x