Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

லஞ்சம் வாங்கி கைதான கொள்முதல் நிலைய ஊழியர், லோடுமேன் பணியிடை நீக்கம் :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள எடமேலையூரைச் சேர்ந்தவர் மணிமொழியன்(62). இவர், கடந்த 29-ம் தேதி எடமேலையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வந்தபோது, அங்கு பணியில் இருந்த பட்டியல் எழுத்தர் முருகையன்(48), லோடுமேன் கோவிந்தராஜ்(50) ஆகியோர் மூட்டைக்கு ரூ.30 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு மணிமொழியன் தகவல் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.9,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை முருகையன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரிடம் மணிமொழியன் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, சித்ரா மற்றும் போலீஸார் வந்து, முருகையன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் சோதனை நடத்தி, முருகையனிடம் இருந்து ரூ.14,350, கோவிந்தராஜனிடம் இருந்து ரூ.5,380 என கணக்கில் வராத பணம் ரூ.19,730-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரும் நேற்று முன்தினம் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, முருகையன், கோவிந்தராஜ் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மண்டல அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x