

கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வத்துடன் செல்லும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் ஏமாற்றுத்துடன் திரும்பி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மையம், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் காலை 8 மணி முதலே, தடுப்பூசி போட்டுக் கொள்ள 18 முதல் 44 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வருகின்றனர்.
நேற்று காலை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். ஆனால், தடுப்பூசி 400 பேருக்கு மட்டுமே என்ற அளவில் இருந்தது. காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நாளைக்கு வருமாறு தெரிவித்தனர். இதனால் காலையில் இருந்து காத்திருந்தவர்கள் அவதியுடன் சென்றனர்.
இந்த மையத்திற்கு கிருஷ்ணகிரி நகராட்சி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகின்றனர். இதனால் இங்கு செயல்படும் மையத்திற்கு கூடுதலாக மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது குறிப்படத்தக்கது.