Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

புதுச்சேரியில் அமைச்சரவை அமைவது எப்போது? - குழப்பத்தை மறைக்க திமுக மீது பழி சுமத்துவதா? : தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ கேள்வி

புதுச்சேரி

புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பு, மிரட்டும் வகையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது நியாயமா? என திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள்கேள்வி எழுப்பினர்.

இதற்கு சிலர் ஏதேதோ சொல்லி திசை திருப்பி வருகின்றனர்.

புதுச்சேரியில் கரோனா தொற்றுஅதி தீவிரமாக உள்ளது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகிவருவதுடன், 25க்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து களும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகளும் கிடைக்காததே அதிக இறப்புக்கு காரணமாக உள்ளது.

இதை சரி செய்து, மக்களை காப்பதற்கு மாறாக இந்த கரோனா கோரப்பிடியின் காலத்திலும் அரசியல் செய்து வருகின்றனர்.

அவர்கள் கூட்டணியில் உள்ள குழப்பத்தாலேயே முதல்வர் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மேலும்முதல்வர் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். கரோனாவின் பிடியில் மக்கள்சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அபாயகரமான காலக்கட்டமாக இருப்பதாலும் இக்காலக் கட்டத்தில் அரசியல் செய்வது சரியல்ல. செயல் படப்போவதும் இல்லை.

ஆனால், தற்போது எதிரணியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகியும், துணை முதல்வர் பதவி வழங்குவதா? இல்லையா? யார், யாருக்கு அமைச்சர் பதவி? யார் யாருக்கு எந்த துறை என்பது தெரியவில்லை. இவைகளில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

திமுகவிற்கு அதன் உயரம் தெரியும். மேலும் ஜனநாயகத்தை காக்க நினைக்கும் திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சித்தது கிடையாது, முயற்சிக்கப் போவதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x