Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

முழு ஊரடங்கு காலத்திலும் அத்தியாவசிய தேவையின்றி - வெளியில் சுற்றுவோரால் அதிகரிக்கும் கரோனா தொற்று : காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், காரணமின்றி வெளியில் சுற்றுவோரால் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் வழக்கம்போல காலை முதல் மதியம் 12 மணி வரை செயல்படலாம் என அறிவித்துள்ளது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படவில்லை. வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு இடங்களில் காலை முதல் மதியம் வரை, வழக்கமான நாட்களைப் போலத் தான் பொதுமக்கள் வெளியிடங்களில் சுற்றி வருகின்றனர். கடைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘ பிரதான சாலைகளை தவிர்த்து, உட்புறச் சாலைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு, ரோந்துப் பணி இல்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் எவ்வித அச்சமுமின்றி, ஊரடங்கு விதிகளை மீறியபடி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் பகுதிகளிலும் கரோனாபாதிப்பை உணராமல் கடைவீதிகளில் மக்கள் திரள்வதாக சுகாதாரத்துறையினர் கவலையடைந் துள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கூட மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 90 பேருக்கு நேற்று கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. உடுமலை நகரம், பூலாங்கிணறு, கணபதிபாளையம், குடிமங்கலம்,மூங்கில் தொழுவு, கோட்டமங்கலம், மடத்துக் குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு என கிராம மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் மற்றும் மூலனூர் பகுதிகளில் சுமார் 32 பேருக்கு நேற்று ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பொன்னிவாடி, அலங்கியம், திருமலையம்பாளையம், கொண்டரசம்பாளையம், தாராபுரம் நகரம் மட்டுமின்றி கிராமப் புறங்களில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடுமலையில் தனியார் மருத்துவமனைகள் நீங்கலாக அரசு மருத்துவமனையில் 120 படுக்கையும், அரசு கலைக் கல்லூரியில் 80 என மொத்தம் 200 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் அரசு மற்றும்தனியார் மருத்துவமனைகள் சேர்த்து 134 படுக்கைகள், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 40, தனியார் கல்லூரியில் 80 என 214 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது. இதில் அவர்களுக்கு உள்ள பாதிப்பின் தன்மைக்கேற்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். அதுவரை வீடுகளில்அவர்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளிலேயே இருப்பது மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்தும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x