Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தாராபுரம் தொகுதியில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணம் - சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு சென்றதுதான் : அரசியல் நோக்கர்கள் கருத்து

உடுமலை

சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு விழுந்ததால்தான் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வெற்றி வாய்ப்பை இழந்திருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிட்டதால், அது விஐபி தொகுதியாக மாறியது. பிரதமர், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கர்நாடக அமைச்சர்கள், தமிழக மேலிட பார்வையாளர் , கர்நாடகாவில் இருந்து ஒரு மாதம் தங்கி பணியாற்றிய பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 300 பேர் வீடு, வீடாக பிரச்சாரம், அதிமுகவின் மாவட்ட செயலாளர், இதர நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி மக்கள் இதுவரை காணாத தேர்தல் திருவிழாவாக இருந்தது.

எதிர்க்கட்சியினரே வியக்கும் வகையில் தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எல்.முருகன் மேற்கொண்ட பிரச்சார பயணம் பாராட்டுக்குரியதாக இருந்தது. பிரச்சாரத்தின்போது நான் வெற்றி பெறுவது உறுதி, ஆனால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றே மேடைகள்தோறும் பேசினார். இது பாஜகவினரை மட்டுமல்ல, கூட்டணி கட்சியினரையும் உற்சாகமூட்டியது. வாக்கு எண்ணிக்கையின்போதும் தொடக்க முதலே பாஜக முன்னிலை பெற்றது. எனினும், தாராபுரம் நகர பகுதிக்கான வாக்குகளை எண்ணும்போது, திமுக முன்னிலை பெறத் தொடங்கியது.

இதுகுறித்து அப்பகுதி அரசியல் நோக்கர்கள் கூறும்போது, "தாராபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு பலம் வாய்ந்த வாக்கு வங்கி உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் பாஜக போட்டியிட்டது. இதில் மொத்த சிறுபான்மையினரின் வாக்குகளும் பாஜகவுக்கு எதிராக சென்றதே திமுகவின் வெற்றிக்கு காரணமாக மாறியது. பாஜக தவிர்த்து அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இன்றி வேட்பாளர் ஜெயித்திருப்பார். திமுகவை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி வரை நெருடலாகவே இருந்தனர். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வாக்குச்சாவடி வாக்குகளை எண்ணும்போது, திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது" என்றனர்.

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 89,986 வாக்குகளும், பாஜக வேட்பாளர் எல்.முருகன் 88,593 வாக்குகளும் பெற்றனர். வித்தியாசம் 1,393 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x