Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

யானைகள் கடக்கும் பகுதி வழியாக செல்லும் - கோவை - பாலக்காடு ரயில்களில் வேகக் கட்டுப்பாடு கருவிகள் இல்லை : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்

கோவை - பாலக்காடு இடையே யானைகள் கடக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும் ரயில்களில் வேகக்கட்டுப்பாடு கருவிகள் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தின் நீளம் மொத்தம் 31.70 கி.மீ. ஆகும். இந்த வழித்தடத்தில் உள்ள போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை ரயில் நிலையங்கள், தமிழக எல்லைக்குள்ளும், வாளையார், கஞ்சிகோடு ரயில் நிலையங்கள் கேரள எல்லைக்குள்ளும் உள்ளன. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என்று இரு ரயில் லைன்கள் உள்ளன. ‘ஏ’ லைன் வெளியிலும், ‘பி’ லைன் அடர் வனப்பகுதிக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ லைன் கோவையில் இருந்து பாலக்காடு செல்லவும், ‘பி’ லைன் பாலக்காட்டில் இருந்து கோவை வரவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ‘பி’ லைனில் கஞ்சிகோட்டுக்கும், வாளையாருக்கும் இடையே 11.50 கி.மீ. தூரமும், வாளையார் மற்றும் எட்டிமடை இடையே 5 கி.மீ. தூரமும் உள்ளது. இந்த ரயில் பாதையில் 2016-ல் இருந்து நடப்பாண்டு வரை 8 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன.

இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களை கோரியிருந்தார். அதற்கு பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரி எஸ்.ஜெயகிருஷ்ணன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வேக வரம்பை மீறியதால் ரயில் மோதி, யானைகள் இறந்தது தொடர்பாக, யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் மீது ரயில் மோதியதில் இன்ஜினுக்கோ, பெட்டிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் இன்ஜின் குறிப்பிட்ட வேகவரம்பைத் தாண்டி இயங்கினால், உடனே நிறுத்துவதற்கு தானியங்கி அவசர நிறுத்தும் வசதிகள் எதுவும் இன்ஜினில் செய்யப்படவில்லை. வேகக்கட்டுப்பாடு கருவி ரயில் இன்ஜினில் பொருத்தப் படவில்லை. இரவு நேரங்களில் ரயில்களின் வேகம் மணிக்கு 45 கி.மீ. எனவும், பகலில் ரயில்களின் வேகம் 65 கி.மீ. எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘வனப்பகுதியில் செல்லும் 'பி' லைனில் விபத்துகள் ஏற்படுவதை கருத்தில்கொண்டு, இரவு நேர ரயில் போக்குவரத்தை இப்பகுதியில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

வேகக்கட்டுப்பாடு கருவி ரயில்களில் இல்லை என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. அதேபோல, ஒவ்வொரு முறையும் யானைகள் ரயிலில் அடிபடும் நிகழ்வுகளின்போது, ரயில்வே நிர்வாகத்திடம், வேகக்கட்டுப்பாடு கருவியை ரயில்களில் பொருத்த வலியுறுத்தப்பட்டதாக கோவை வனத்துறையின் விளக்கம், எந்தவகையிலும் செயல் வடிவம் பெறவில்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x