Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

தருமபுரி மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு :

தருமபுரி மாவட்டத்தில் ஒருசில சலசலப்புகள் இருந்தபோதும் அமைதியான முறையில் நேற்று சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) என மொத்தம் 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 67 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 870 இடங்களில் 1817 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடி மையங்கள் அனைத்திலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பென்னாகரம் தொகுதியில் ஏரிமலையில் மட்டும் சாலை வசதி கேட்டு தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் பேச்சு வார்த்துக்கு பின்னர் காலை 11.30 மணியில் இருந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

கோட்டூர் மலைக் கிராம மக்கள் அதே கோரிக்கைக்காக தேர்தலை முற்றிலும் புறக்கணித்தனர். அரூர் தொகுதியில் வள்ளிமதுரை அடுத்த வாழைத்தோட்டம் கிராம பகுதியில் செல்போன் சிக்னல் சரிவர கிடைக்காத நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க முடியாத நிலை இருப்பதாகக் கூறி செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.

இவ்வாறு மாவட்டத்தில் ஒருசில சலசலப்புகள் இருந்தபோதும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் பி.கே.முருகன் அமானி மல்லாபுரம் அருகிலுள்ள பாவளி கிராம வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி அஜ்ஜனஅள்ளியில் வாக்களித்தார். திமுக வேட்பாளரும் எம்எல்ஏ-வுமான இன்பசேகரன் சாலை குள்ளாத்திராம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிப்பட்டி வாக்குச் சாவடியிலும், திமுக வேட்பாளரும், எம்எல்ஏ-வுமான தடங்கம் சுப்பிரமணி தடங்கம் கிராமத்திலும் வாக்களித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி வாக்குச் சாவடியிலும், திமுக வேட்பாளர் பிரபு ராஜசேகர் மோட்டுப்பட்டி வாக்குச்சாவடியிலும், அமமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பாப்பிரெட்டிப் பட்டி அடுத்த மோளையானூரிலும் வாக்களித்தனர்.

அரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏ-வுமான சம்பத்குமார் அரூர் அடுத்த பொய்யப்பட்டியிலும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் குமார் அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்திலும் வாக்களித்தனர்.

கரோனா வாக்காளர்கள்

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு தொகுதியில் 6, பென்னாகரத்தில் 2, தருமபுரியில் 3, பாப்பிரெட்டிப்பட்டியில் 2 என மொத்தம் 13 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் வாக்களிக்க வந்தனர். இவர்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு அலுவலர்களும் கவச உடை அணிந்து கொண்டு அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.

வாக்குப்பதிவு சதவீதம்

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பாலக்கோடு தொகுதியில் 70.88 சதவீதம், பென்னாகரத்தில் 73.63 சதவீதம், தருமபுரியில் 73.08 சதவீதம், பாப்பிரெட்டிப்பட்டியில் 71.32 சதவீதம், அரூரில் 70.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x