Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

3-வது புதிய பாதையில் ரயில்கள் இயக்குவதற்கு - தாம்பரம் யார்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணி நிறைவு :

சென்னை

தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது புதிய பாதையில் ரயில்களை இயக்குவதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் தாம்பரம் பணிமனையில் (யார்டில்) நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ரயில்களின் சேவையை அதிகரிக்கவும், தாமதம் இன்றி ரயில்களை இயக்கவும் சென்னையின் முக்கிய நுழைவு பகுதியாக இருக்கும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை 3-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016=ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடியாகும். பணிகள் முடிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - தாம்பரம் என 3 பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், 2 கட்ட பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு ஆணையரைக்கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, அந்த பாதையில் ரயில்களை இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் இடையே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்டமாக, கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையே அமைக்கப்படும் புதிய பாதை பணியில் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகளை விரைவில் நிறைவு செய்யவுள்ளோம். அதுபோல், செங்கல்பட்டு - தாம்பரம் புதிய பாதையில் ரயில்களை இயக்குவதற்கான சிக்னல் மற்றும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பணிகள் தாம்பரம் பணிமனையில் (யார்டில்) நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பணிகள் நிறைவடைந்தவுடன், கூடுவாஞ்சேரி - தாம்பரம் தடத்திலும் விரைவில் சோதனை ஒட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x