Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

பட்ஜெட்டில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு புதிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே’

தஞ்சாவூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை என்றாலும், தேர்தலுக்கு முந்தைய நிதிநிலை அறிக்கை என்பதால், விவசாயிகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்த புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஏற்கெனவே, தமிழக அரசு அறிவித்த கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து கண்டுகொள்ளப்படாததால், இது ஏமாற்றம் தரும் அறிக்கையாகவே உள்ளது.

விவசாயத்துக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் தரப்படும் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து கடந்த பல ஆண்டுகளாக காத்திருப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

பாசன மேம்பாட்டுக்கு நிதிநிலை அறிக்கைக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தவிர புதிய நீர்ப்பாசன மேம்பாடு குறித்த அறிவிப்போ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பது கவலை தரக்கூடியதாக உள்ளது.

குடந்தை அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன்:

கரோனா காலத்தில் ஊரடங்கின்போது கடைகள் பூட்டப்பட்டிருந்த காலத்துக்கும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ரத்து செய்யப்படும் என காத்திருந்தோம், அதுகுறித்து அறிவிப்பு ஏதும் இல்லை.

கரோனாவின்போது, உயிரிழந்த வணிகர்களுக்கு இழப்பீடு குறித்து ஏதும் இல்லை. இந்த பட்ஜெட்டில் வியாபாரிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை. மொத்தத்தில் வணிகர்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடிய பட்ஜெட்டாகவே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x