Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

20 ஆண்டுகளில் இல்லாத அளவில் உற்பத்தி இலக்கை எட்டியது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனுராக் தகவல்

காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரிப்படுகை நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்ற 72-வது குடியரசு தின விழாவில் நிறுவன செயல் இயக்குநரும், குழு பொது மேலாளருமான(பொ) அனுராக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியது:

கரோனா பரவல் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில், ஓஎன்ஜிசி நிறுவனம் சவாலை திறமையாக எதிர்கொண்டு, தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து, கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவில், ஒரு நாளுக்கு 1,126 டன் உற்பத்தி என்ற இலக்கை எட்டியுள்ளது. தொழிலாளர்களின் அயராத உழைப்பு மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நிகழாண்டு மட்டும் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம், ரூ.4.4 கோடி அளவுக்கு தனிநபர் கழிப்பறை, தானியங்கி துப்புரவு இயந்திரம் வழங்கல், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, மருத்துவமனைகளுக்கு தேவையான உயிர் காக்கும் இயந்திரங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், கரோனா தடுப்பு சாதனங்கள், பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட 120 மக்கள் நலத் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஓஎன்ஜிசி நிறுவனத் தலைவர் சசிசங்கர் தலைமையின் கீழ் இயங்கும் இயக்குநர்கள் மற்றும் 30 ஆயிரம் தொழிலாளர்களின் கடின உழைப்பால், உலகத் தரவரிசையில் 11-வது இடத் தையும், மதிப்புமிக்க ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் வரிசையில் 18-வது இடத்தையும் ஓஎன்ஜிசி பெற்றுள்ளது.

இந்தியாவின் தேவையில் 75 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் 65 சதவீத எரிவாயு உற்பத்தி இலக்கையும் எட்டி சாதனை படைத்துள்ளது. ஓஎன்ஜிசி மக்களுக்கான நிறுவனம், அதன் பணிகள் மேலும் சிறக்க பொதுமக்கள் தங்களின் ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x