Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

நெல் கொள்முதல் மையங்களை திறக்க அரசுக்கு கோரிக்கை

அறுவடை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் மையங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், உடுமலை பகுதிகளில் அமராவதி அணை பாசனத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு பருவமழையால் தேவையான நீராதாரம் கிடைத்ததால், வழக்கத்துக்கு மாறாக பல இடங்களில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கினர். கடந்த சில நாட்களாக கல்லாபுரம், குமரலிங்கம், கொழுமம், கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிலர், நெல் அறுவடையை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் அறுவடையின்போது கொள்முதல் மையம் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நெல் அறுவடை தொடங்கியும் கொள்முதல் மையங்கள் திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘மடத்துக்குளம் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர், உடுமலை பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் பருவமழை பெய்ததால், நெல் சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது. மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதிகளில் உடனடியாக நெல் கொள்முதல் மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x