Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

ஓசூரில் கடும் பனிப்பொழிவால் பட்டன் ரோஜா உற்பத்தி குறைவு

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், தளி, தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடிக்கு ஏற்ற வகையில் தரமான மண் வளத்துடன் குளுமையான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கு விளையும் பட்டன் ரோஜா பூ வகைகள் தினமும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் ஓசூர் பகுதியில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் சாம்பல் நோய், மொட்டு கருகல் உள்ளிட்ட நோய் தாக்கத்தினால் பட்டன் ரோஜா உற்பத்தி குறைந்துள்ளது. நோய் தடுப்பு மருந்துக்கான செலவு இருமடங்காக உயர்ந்துள்ளதால்மலர் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து தளி விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:

இப்பகுதியில் விளையும் தரமான பட்டன் ரோஜா மலர் களுக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சொட்டுநீர் பாசன வசதியை பயன்படுத்தி தொடர்ந்து பட்டன் ரோஜா மலர்கள் பயிரிடுவதில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 3 மாதங்களாக அதிகமான பனிப்பொழிவினால் பட்டன் ரோஜா மலர்களில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. மருந்து தெளிப்பு செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை உள்ளது. மலர் பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாகனச் செலவு ஆகியவையும் அதிகரித்துள்ளது.

இடையில் சில நாட்கள் மட்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோபட்டன் ரோஜா ரூ.150 வரை விற்பனையானது. அதன்பிறகு மீண்டும் விலை ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை என குறைந்து விட்டது. பனிப்பொழிவு காரணமாக உற்பத்தியும் குறைந்து, சரியான விலையும் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சூளகிரி தோட்டக் கலைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்வேந்தன் கூறியதாவது:

ஓசூர் ஒன்றியத்தில் மொத்தம் 300 ஹெக்டேர் பரப்பளவில் பட்டன் ரோஜா பயிரிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சூளகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலும் விவசாயிகள் அதிக பரப்பளவில் பட்டன் ரோஜா பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் அதிகமான பனிப் பொழிவு காரணமாக பட்டன் ரோஜா மலர்களில் சாம்பல் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிக பனியால் மலர்கள் மொட்டுக்களிலேயே கருகி விடுகின்றன. இதனால் இப்பகுதியில் 50 சதவீதம் வரை மலர்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x