Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

காட்டு யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில் அவர் கூறியிருப் பதாவது:

காட்டு யானை தாக்கி நீலகிரி மாவட்டம் கூடலூர்ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் மரணம் அடைந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அவர்களது மரணத்திற்குக் காரணமான ஆட்சியாளர்களின் மெத்தனத்தைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்ட திமுகசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

இருவரது திடீர் மரணத்திற்கும் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ் திமுக கட்சிப் பணியிலும், பொதுப் பணியிலும் தீவிரமாகப் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர். அதிமுக அரசின் அலட்சியத்துக்கு திமுகவைச் சேர்ந்த இருவர் பலியாகிஇருப்பது மட்டுமின்றி இதுவரை கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் 10 பேர் காட்டு யானை தாக்குதலுக்குப் பலியாகி இருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

காட்டு யானைகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து என்பது அதிமுக அரசுக்கு நன்கு தெரிந்தும் மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அனைவரது குடும்பத்திற்கும் தலா ரூ. 25 லட்ச நிதியுதவி அளிக்கவேண்டும். இதுபோன்ற தாக்குதல் கள் இனிமேலும் நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x