Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாராத ஏரிகளை காட்டி எதிர்க்கட்சியினர் போராடுகின்றனர் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்படாத ஏரிகளைக் காட்டி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என அமைச்சர் கே.சி.வீரமணி குற்றஞ்சாட்டினார்.

வேலூர் மாவட்டம் குடியாத் தத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் ரூ.2.12 கோடி மதிப்பிலும் கோட்டாட்சியர் குடியிருப்பு ரூ.39 லட்சம் மதிப்பிலும், வட்டாட்சியர் அலு வலகம் ரூ.3.7 லட்சம் மதிப்பிலும் கட்டப்படவுள்ளன. இதற்கான பூமி பூஜை விழா மற்றும் ரூ.4.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

அதேபோல், கே.வி.குப்பத்தில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் ரூ.3.07 கோடி மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையும் பல்வேறு துறைகள் சார்பில் 388 பேருக்கு ரூ.5.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது.

இந்த இருவேறு நிகழ்ச்சி களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப் பினர் லோகநாதன், ஆவின் பெருந்தலைவர் வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் அனைவரையும் வரவேற்றார்.

முன்னதாக, இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வேலூர் மாவட் டத்தை மூன்றாகப் பிரித்தும் குடியாத்தம், வாணியம்பாடி, அரக்கோணம் ஆகிய புதிய வருவாய் கோட்டங்களுடன் கே.வி.குப்பம் புதிய வட்டத்தை உருவாக்கியதுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் 101 ஏரிகளில் 56 ஏரிகளில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டதில், தற்போது பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் மேலாண்மை பணிகளை சிறப் பாக செயல்படுத்திய காரணத்தால் தென் மாநில அளவில் வேலூர் மாவட்டத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

ஆனால், எதிர்க்கட்சியினர் தூர்வாரப்படாத ஏரிகளைக் காட்டி குடிமராமத்து திட்டம் செயல் படுத்தவே இல்லை எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிமராமத்து திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏரிகளில் நிதி ஒதுக்கீடு செய்து படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது’’ என்றார். முடிவில், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x