Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

ஆழியாறு வண்ணத்துப் பூச்சி பூங்கா திறப்பு : சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, அருவியுடன் கூடிய வன செயல் விளக்க மையம் இன்று திறக்கப்படுகிறது.

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், அணைப்பகுதி பூங்கா, வண்ண மீன் காட்சியகம் மற்றும் கவியருவி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள், பழங்குடியினர் வாழ்க்கை முறை, வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்வதற்காக, 2003-ல் ஆழியாறு சோதனைச்சாவடி அருகே வனத்துறை சார்பில், வன செயல் விளக்க மையம் அமைக்கப்பட்டது. இதில், புலிகள் காப்பகத்தின் பல்லுயிர்கள், வரைபடம், பழங்குடியினரின் வாழ்க்கை முறை, புகைப்படம் மற்றும் தகவல்கள் இடம் பெற்றன. இரண்டாண்டுகள் செயல்பட்ட பின் இந்த மையம் மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வனத் துறையினர், மீண்டும் வன செயல் விளக்க மையத்தை சீரமைத்து, புதுப்பிக்கும் பணிகளை தொடங்கினர். இந்த பூங்காவில் வண்ணத்துப்பூசி, அந்துப்பூச்சி, பாம்புகள், முதலைகள், மூங்கில், மீன்கள் ஆகியவற்றின் தகவல்கள் அடங்கிய பலகைகளை வைத்தனர். இருவாச்சி பறவை, ‘தமிழ் மறவன்’ வண்ணத்துப்பூச்சி, பாம்பு, சிலந்தி ஆகியவற்றின் சிற்பங்களை வைத்துள்ளனர்.

வண்ணத்துப் பூச்சிகளை கவரும் வகையில் பல வகை மலர் தாவரங்கள் நடவு செய்தும், சிறிய அருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா இன்று (நவ. 1) திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x