Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதாக கூறி - திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிப்பதாகக் கூறி திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி யினர் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்கள் மற்றும் பெட் ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிப்பதாகக் கூறியும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில்நேற்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடுகள் முன்பும், கட்சிகளின் அலுவலகங்கள் முன்பும் இந்தப் போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். காங்கிரஸ் நகரத் தலைவர் மணிகண்டன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், மார்க்சிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், விசிக,

திக உள்ளிட்ட கூட்டணிக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் 111 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர்

விருதுநகர் தேசபந்து திடலில் திமுக நகரச் செயலர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டின் அருகிலும் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோன்று, சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட 145 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜபாளையத்தில் நகர திமுக அலுவலகம் முன் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையிலும், ராஜபாளையம் நகர காங்கிரஸ் அலுவலகம் முன் மேற்கு மாவட்டத் தலைவர் ரெங்கசாமி தலைமையிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்டம் போடி திமுக அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கம்பத்தில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காங்கிரஸ் சார்பில் கம்பம் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன் பட்டியில் திமுக. மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப் பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தனது வீட்டின் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இ.யூ முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி எம்பி, சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் தனது வீட்டின் முன்பும், திமுக எம்எல்ஏ முருகேசன், முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் திவாகரன் ஆகியோர் பரமக்குடியில் தங்கள் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மார்க்சிஸ்ட் சார்பில் ராமநாதபுரம், ராமேசுவரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகங்கள் முன் முறையே மாவட்டச் செயலாளர் காசிநாததுரை,

தாலுகா குழு உறுப்பினர் அசோக் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், விசிக, மனிதநேய மக்கள் கட்சிகள் சார்பிலும் போராட்டங்கள் நடந்தன.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 60 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ மாங்குடி தலைமையிலும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையிலும், இளையான்குடி அருகே முனைவென்றியில் தமிழரசி எம்எல்ஏ தலைமையிலும் போராட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x