Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

வசீம்அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் :

வாணியம்பாடி: வாணியம்பாடி வசீம்அக்ரம் கொலை வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல் நேற்று உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவாநகரைச் சேர்ந்தவர் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச்செயலாளர் வசீம்அக்ரம் (42). இவர், கடந்த 10-ம் தேதி ஜீவா நகரில் தொழுகை முடிந்து வீடு திரும்பியபோது, மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சென்னையைச் சேர்ந்த 2 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த 5 பேர் என 7 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபர்களாக தேடப்பட்டு வந்த டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், செல்வகுமார், முனீஸ்வரன், அஜய், அகஸ்டின், பிரவீன்குமார் மற்றும் சத்திய சீலன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி காளிமுத்துவேல் 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, 6 பேரும் வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x