Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

புதிய மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று கட்டாயம் : 12 மீட்டர் உயரத்துக்கு குறைவான குடியிருப்புகளுக்கு மட்டும் விலக்கு

விலக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் தவிர மற்ற அனைத்து கட்டிடங்களுக்கும் புதிய மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று கட்டாயம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதியில்லாத, பாதுகாப்பில்லாத, சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்-2019 உருவாக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், சிறப்பு திட்டத்தின்கீழ் தாழ்வழுத்த மின்இணைப்பு கோருபவர்கள், மின்இணைப்பு பெறலாம். அதற்கு, கட்டிடத்தின் உயரம் 12 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “மின் இணைப்பு வழங்குவது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் 2019-ஐ கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என கடந்த மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அதை மதிக்காமல் மின்வாரியம் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கட்டிடத்தின் அளவு, பயன்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல், 12 மீட்டர் உயரம் வரையுள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் புதிய இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏப்ரல் 16 சுற்றறிக்கைக்கு, கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தடைவிதித்ததோடு, புதிய இணைப்புகள் வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை பின்பற்றுமாறு உத்தரவிட்டது. ஆனால், இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை"என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மின்வாரிய இயக்குநர் (விநியோகம்) அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் கடந்த 1-ம் தேதி அனுப்பியுள்ள உத்தரவில், “ஏப்ரல் 16 சுற்றறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஜூலை 4-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு உத்தரவு வரும்வரை பின்பற்ற வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.

எந்தெந்த கட்டிடங்களுக்கு விதிவிலக்கு?

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, "மின்வாரிய இயக்குநர் (விநியோகம்) 2020 ஜூலை 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்-2019-ல், விதி 20-ன்படி, 12 மீட்டர் வரை உயரம் உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் கொண்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதவிர உள்ள அனைத்து தொழில்நிறுவன கட்டிடங்கள், இதர கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றை சமர்ப்பிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத்தொடர்ந்து புதிய மின் இணைப்புகள் வழங்க கடந்த இரண்டு வாரங்களாக 2020 ஜூலை 4-ம் தேதி உத்தரவையே மீண்டும் பின்பற்றி வருகிறோம். புதிதாக மின் இணைப்பு கோருவோர், கடந்த 2019 பிப்ரவரி 4-ம் தேதிக்கு முன் கட்டிட அனுமதி பெற்றிருந்தால் கட்டிட நிறைவு சான்றை சமர்ப்பிக்கத் தேவையில்லை. அந்த தேதிக்கு பின் கட்டிட அனுமதி பெற்றிருந்தால் கட்டிட நிறைவு சான்றை சமர்ப்பித்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும்"என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x