Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால்16 பேர் தீக்குளிக்க முயற்சி : நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(43), இவரது சகோதரர்கள் கந்தன்(40), கருப்பண்ணசாமி(32). இதே ஊரைச் சேர்ந்தவர் அசோக்(26). இந்த 4 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் என 16 பேர் நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், தாங்கள் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணயை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

தகவலறிந்த நாகை போலீஸார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பழனி கூறியது:

எனது மற்றொரு சகோதரரான முத்து(38) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரியா(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்தனர். இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தார், இருதரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், பிரியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.16 லட்சம் அபராத தொகையை முத்து செலுத்த வேண்டும் என பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.

அதன்பின், திடீரென முத்து தலைமறைவாகிவிட்டார். கடந்த 2 மாதங்களாக பல இடங்களில் தேடியும் முத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், பஞ்சாயத்தார்கள் எனது குடும்பம், எனது மற்ற 2 சகோதரர்கள் குடும்பங்கள் மற்றும் எனது உறவினர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர்.

ஊரை விட்டு ஒதுக்கிவைத்து 16 நாட்கள் ஆன நிலையில், எங்களால் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களது குழந்தைகள் பசியால் வாடி வருகின்றனர்.

எனவே, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x