Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

தியானலிங்கம் பிரதிஷ்டையின் 22-வது ஆண்டு தினம் : ஈஷாவில் பல்வேறு மத மந்திரங்கள் அர்ப்பணிப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 22-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை ஈஷா யோகா மையத்தில், உள்ள தியானலிங்கத்தின் 22-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், கடந்த 21 ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன. தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தினநிகழ்வு தொடங்கியது.

இதைத் தொடர்ந்து புத்த மத உச்சாடனைகளை ‘சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா’ குழுவினர் அர்ப்பணித்தனர். பின்னர், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, ரோம், போர்ச்சுகீஸ், ரஷ்யன், கிரீக், எத்தியோப்பியன், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அடங்கிய கிறிஸ்தவ பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் அர்ப்பணித்தனர்.

அத்துடன், ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடாகம்’, ‘குரு பாதுக ஸ்தோத்ரம்’ ஆகிய 2 சக்தி வாய்ந்த மந்திரங்களின் உச்சாடனைகளும் நடைபெற்றன. தேவார பாடல்கள் பாடப்பட்டன. நேற்று மாலை 6.10 மணிக்கு ‘நாதஆராதனை’ எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு,கரோனா சூழல் காரணமாக ஈஷாயோகா மையம் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, மந்திர உச்சாடனைகள் ஆடியோ வடிவில் ஆன்லைன் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஈஷாவில் உள்ளதியானலிங்கமானது சுமார் 3ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் கடந்த1999-ம் ஆண்டு ஜூன் 24-ம்தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்த் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக் கப்பட்டுள்ள லிங்கங்களில் இது தான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x