Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

கோவை மாநகர காவல்துறையில் - குற்றப்பிரிவின் பெயர் புலனாய்வு பிரிவு என மாற்றம் : சட்டம் ஒழுங்கு வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைப்பு

கோவை

கோவை மாநகர காவல் துறையில் குற்றப்பிரிவின் பெயர் புலனாய்வு பிரிவுஎன மாற்றப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் குற்றப் பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு என்பவை முக்கியமானவை. இதில் குற்றப் பிரிவின் பெயரை புலனாய்வு பிரிவு என மாற்றி, சட்டம் ஒழுங்கு பிரிவில்கண்டறியப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது புலனாய்வு பிரிவின் பொறுப்பு என கடந்த 2019-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை தற்போது கோவை மாநகர காவல்துறையில் அமல்படுத்த, காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, குற்ற வழக்குகள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு வழக்குகளின் விசாரணையையும் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வழக்குகளை தீர்த்து வைக்கும் வரை தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் மற்றும் சிறப்பு சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் 174 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் மீதான புலன் விசாரணை, சட்டம் ஒழுங்கு பிரிவில் மேற்கொள்ளப்பட்டு உரிய முறையில் முடிவு செய்யப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்களை தொடர்புடைய சட்டம் ஒழுங்கு அதிகாரி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, அனைத்து விவரங்களுடன் புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை புலனாய்வு பிரிவு தனது பணியை தொடர வேண்டும்.

இதில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை எந்த விதமான பாதுகாப்பு அலுவல்களுக்கும் காவல்ஆணையரின் முன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. மேலும், பாதுகாப்பு பணி, சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களை அமல்படுத்து தல், ரோந்து அணிவகுப்பு, குற்றத் தடுப்பு, சமூக பந்தம், சமுதாய களப்பணி, நிலைய பதிவேடுகளை பராமரித்தல், கடித போக்குவரத்து, பிற நிர்வாக பணிகள் உள்ளிட்ட அனைத்து பிற பணிகளும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தால் கவனிக்கப்பட வேண்டும், என காவல் துறையினருக்கு அறிக்கை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த மாற்றம் மூலமாக ஒரு வழக்கில் நீண்ட, ஆழமான விசாரணை நடத்த முடியும். வழக்கு விசாரணையின் தரம் மேம்படும்.

வடமாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் இது நிறை வேற்றப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x