Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : தடுக்கக் கோரி அமைச்சரிடம் பல்வேறு கட்சியினர் வலியுறுத்தல்

கோவை

கரோனா தொற்று பரவல் தடுப்புநடவடிக்கை தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சரிடம், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

கோவையில் கரோனா தொற்றுபரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘‘கோவையில் கரோனா முதல் அலையின்போது, மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தற்போதும் மேற்கொள்ள வேண்டும். வீதிவீதியாககிருமிநாசினி தெளிக்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா கூடுதல் வார்டுகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டெசிவர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை அரசு மருத்துவமனை யில், கரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளிகளின் உடலை விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறப்படுவதை தடுக்க, கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் அளித்த மனுவில், “கரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை அரசு வரன்முறைப் படுத்த வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் வேறு காரணங்களைக்கூறி காப்பீடுதாரர்களுக்கு கரோனா சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைக் காக்க வைக்காமல் உடனடியாக எரியூட்ட இன்னும் சில சிறப்பான ஏற்பாடுகள் தேவை. அரசு, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தற்காலிக கழிப்பறைகளை அமைத்து உதவ வேண்டும்’’ என்று தெரிவித் துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் அளித்த மனுவில் ‘‘கோவை மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

ரெம்டெசிவர் மருந்து விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்பூசிக்காக மக்கள் காத்திருப்பதை தடுக்க, தடுப்பூசி செலுத்துவதை முறைப்படுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x