Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

தமிழ் இலக்கியத்தில் தகுதி பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் இ4லக்கியத்தில் தகுதி பெற்றவர்களையே பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கவும், அரசு வேலைவாய்ப்பில் தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் கல்விச் சலுகை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையும், பட்டப்படிப்பு அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு சலுகை வழங்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும். அரசுப் பணித் தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழிக் கல்வி ஒதுக்கீட்டு சலுகையை பின்பற்ற வேண்டும்

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு சான்றிதழ்களில் எந்த மொழியில் கல்வி பயின்றார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என கல்வித் துறைக்கு தலைமைச் செயலர் உத்தரவிட வேண்டும்.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான சலுகையில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களிடம் தமிழ் வழிக்கல்வி உதவித் தொகை சான்றிதழ், தமிழ் வழிக் கல்வி சான்றிதழ்களை கட்டாயம் பெற வேண்டும்.

மத்திய அரசு, பிற மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாத சூழல் உள்ளது. இந்தச் சூழலில் தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அரசு வேலைவாய்ப்புப் பெற இதுவரை சந்தித்து வந்த தடைகளை நீக்கும் வகையில் 2010-ல் கொண்டு வரப்பட்ட அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத சலுகை சட்டம் மற்றும் 2020-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் ஆகியன செல்லுபடியாகும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போலியாக தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அமைக்க வேண்டும்.

சிறப்பு படை 6 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். 3 மாதத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணை முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகத்திலும் போலியாக தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு படை விசாரிக்க வேண்டும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பான விசாரணையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் பிற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் இலக்கியத்தில் உரிய தகுதி பெற்றவர்களையே தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இளநிலையில் ஒரு பாடத்திலும், முதுநிலையில் இன்னொரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை (கிராஸ் மேஜர்) தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x