Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

சென்னை, புறநகர் பகுதிகளில் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் : தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றனர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அமைதியான முறையில், கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கதேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தாம்பரம் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் தளவாட பொருட்கள் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி, காலை 9 மணிக்குத் தொடங்கியது. தொகுதி தேர்தல்நடத்தும் அதிகாரியான தாம்பரம் கோட்டாட்சியர் ரவிசந்திரன்முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பல்லாவரம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளியில் இருந்து அனுப்பப்பட்டன.

அம்பத்தூரில் உள்ள 349 வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேர்தல் அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு போய் சேர்த்தனர். மதுரவாயல் தொகுதியில் உள்ள 421 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அலுவலர்இளங்கோவன் மேற்பார்வையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

பூந்தமல்லி தொகுதியில் தேர்தல் அலுவலர் பிரீத்தி பார்கவி தலைமையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டன.

திருவொற்றியூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம் ஆகியதொகுதிகளில் மொத்தம் 1,116வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் மொத்தம் 5,132 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திருவொற்றியூரில் உள்ள 427 வாக்குச்சாவடிகளுக்கும், திரு.வி.க நகரில் உள்ள 323 வாக்குச்சாவடிகளுக்கும், வில்லிவாக்கத்தில் உள்ள 366 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

விருகம்பாக்கம் தொகுதியில் 420 வாக்குசாவடிகள் உள்ளன. இவற்றில், 36 வாக்குசாவடிகள் பதற்றமானவையாகும். இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளில் 210 வாக்குச்சாவடி களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று முன்தினம் மாலை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்றுவாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 38 வாக்குச்சாவடி களும், எழும்பூர் தொகுதியில் 71 வாக்குச்சாவடிகளும், பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

மொத்த வாக்குச்சாவடிகளும் காவல்துறையினரின் முழுகட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான பணி ஆணையைப் பெற்று நேற்றுமாலைக்குள் அவரவர் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பணியைத் தொடங்கினர்.

வாக்குச்சாவடி மையங்களில்கழிப்பறை வசதி, குடிநீர் வசதி,மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சாய்வு தளங்கள், வாக்காளர்கள் வெயிலில் நிற்பதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கத் தேவையானநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x