Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

குமரியில் 2,243 வாக்குச்சாவடிகளும் தயார் : பதற்றமான 272 சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு

மலைகிராமமான மேல்கோதையாறு வாக்குச்சாவடிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் மா.அரவிந்த் வழங்கினார்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தலும், நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 15,71,651 வாக்காளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி யில் 2,92,943 பேரும், நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் 2,70,402 பேரும், குளச்சல் தொகுதியில் 2,68,218 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 2,39,036 பேரும், விளவங்கோடு தொகுதியில் 2,47,853 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 2,53,199 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

துணை ராணுவம்

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் 417 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 390 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 372 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 348 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 358 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 358 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவி ஆகியவை வாக்குச்சாவடிகளுக்கு நேற்றே கொண்டு செல்லப்பட்டன. பணியாளர்களும் நேற்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு சென்று பணியில் ஈடுபட்டனர்.

பதற்றமான 272 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 7 வாக்காளர்கள் மட்டுமே உள்ள மலைகிராமமான மேல்கோதையாறு வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் மா.அரவிந்த் வழங்கினார்.

மூன்றடுக்கு பாதுகாப்பு

இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நாகர்கோவில் கோணம் அரசினர் பொறியியல் கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றுக்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்.

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x