Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

நீலகிரி மலை ரயிலில் பாட்டுப்பாடி பயணிகளை மகிழ்விக்கும் டிக்கெட் பரிசோதகர்

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலில் பயணிப்பதே தனி சுகம்தான். குகைகள், அருவிகள், பாலங்களைக் கடந்து, இதமான சூழலில் இயற்கையை ரசித்தபடி மெல்ல பயணிக்கும் ரயிலில், தனது கனிவான பேச்சாலும், பாட்டுப் பாடியும் கடந்த 4 ஆண்டுகளாக பயணிகளை மகிழ்வித்துவருகிறார் டிக்கெட் பரிசோதகர் வள்ளி (58).

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த சொர்ணூரைச் சேர்ந்த இவர், துப்புரவுப் பணியாளராக பணியில் சேர்ந்து, படிப்படியாக டிக்கெட் பரிசோதகராக உயர்ந்துள்ளார். தினமும் டிக்கெட் பரிசோதனைப் பணி முடிந்தபின், பயணிகளுக்காக பாடத் தொடங்குகிறார். மலை ரயிலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயணிப்பார்கள் என்பதால், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், படுகா பாடல்களை, பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் பாடுவது கூடுதல் சிறப்பு.

இதுகுறித்து அவர் கூறும்போது, "எங்கள் குடும்பமே கலைக் குடும்பம்தான். ரயில்வேயில் வேலைக்கு சேரும் முன் மேடைகளில் பாடி வந்தேன். அந்த தொடர்பு இல்லாமல் போகக் கூடாது என்பதற்காக ரயிலில் பாடி வருகிறேன். எனது குரல், பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் குரலை ஒத்திருப்பதாக பலரும் கூறுவார்கள்.

பயணிகளுக்காக நான் பாடல்களைப் பாடி வருவதை யறிந்த அவர், ஒருமுறை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது மறக்க முடியாதது. அப்போது அவர் பாடிய 3 மலையாளப் பாடல்களை பாடினேன். அதைக்கேட்ட அவர் `நீங்கள் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்' என வாழ்த்தினார்.

சேவைக்கு விருது

ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு அடுத்தடுத்து வரும் இடங்களை முன் கூட்டியே தெரிவித்து, அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பேன். எங்கு பாலம் வரும், எங்கு அருவி வரும், எந்த இடம் புகைப்படம் எடுக்க சரியான வியூ பாயின்ட் போன்ற தகவல்களை தெரிவிப்பேன்.

பயணிகள் என் மீது வைத்துள்ள அன்புக்கு ஈடு இணை இல்லை. இன்னும் ஓராண்டு எனது பணிக்காலம் உள்ளது. அதன் பின் மலை ரயிலைப் பிரிவது எனக்கு சற்றுக் கடினமாக இருக்கும். பயணிகளுடனான எனது இந்த உறவைப் பாராட்டி. தெற்கு ரயில்வே விருது வழங்கியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x