Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோநேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னைக்கு அருகில் 330 ஏக்கரில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை 6,110 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய சுற்றுச் சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழ் கேட்டு அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பாக வரும் 22-ம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான 6,110 ஏக்கர் நிலப்பரப்பில், 2,291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமானது. 1,515 ஏக்கர் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமானது. இது தவிர சுமார் 1,967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்றி காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்பகுதி முழுவதும் சேற்றுத்திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம்குறைவான கடல் பகுதியாகும்.இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் குறையும். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஏற்கெனவே, சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தினால் கொற்றலை ஆற்றுக்கும், கடலுக்கும் இடையே இருந்த கடற்கரை இப்போது சில நூறு மீட்டர்களாக சுருங்கி விட்டது. இந்நிலையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதமுள்ள கடற்கரையும் அரிக்கப்பட்டு, கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

எனவே, குறுகிய கால அவகாசத்தில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x