Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன உயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம்

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, உலாந்தி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச் சரகப் பகுதிகளில், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய், சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. ஆண்டுதோறும் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் கோடைகால மற்றும் குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்புப்பணி நடைபெறும்.

இந்தாண்டுக்கான குளிர்கால கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கி, வரும் 21–ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய 4 வனச் சரகத்தைச் சேர்ந்த வனச்சரகர்கள், வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் என மொத்தம் 186 பேருக்கு அட்டகட்டி வனத் துறை பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

புலிகள் காப்பக கள இயக்குநரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் பயிற்சியை தொடங்கிவைத்து பேசும்போது, “மாமிச உண்ணிகளின் கால்தடம், எச்சம், நகக்கீறல் மற்றும் நேரடியாக பார்த்து பதிவு செய்ய வேண்டும். கால்தடம் தொடர்ந்து காணப்பட்டால் அவற்றை ஒரே தடயமாக கருத வேண்டும். கணக்கெடுக்கும் பணியின் துல்லிய தன்மைக்காக மொபைல் போனில் பதிவிடும் ஈக்கோலாஜிக்லி செயலி முறை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் 4 வனச் சரகங்களில் உள்ள 32 வனக் காவல் சுற்றுகளில், 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நேர்கோட்டு பாதைக்கான குழுவில் இரண்டு வனத் துறை பணியாளர்கள், ஒரு வேட்டை தடுப்பு காவலர் என 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை எந்த விலங்கு எந்தப் பகுதியில் வாழ்கிறது என்பது கணக்கெடுக்கப்படுகிறது. முதல் 6 நாட்கள் கணக்கெடுப்பு பணியும், ஏழாவது நாள் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்” என்றார். பயிற்சி முகாமில் தலைமையிட உதவி பாதுகாவலர் பிரசாத், உதவி வன பாதுகாவலர் செல்வம், உயிரியலாளர்கள் பீட்டர் பிரேம் சக்ரவர்த்தி மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x