Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

கோவையில் ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பு கொடிசியாவுடன் 4 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் மையம் அமைக்க மத்திய அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ‘நிதி ஆயோக்’ அமைப்பின் கீழ் செயல்படும் ‘அடல் இன்னவேஷன் மிஷன்’ திட்டத்தில், கோவை கொடிசியா டிபன்ஸ் இன்னவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சிடிஐஐசி) அமைக்க கள்ளப்பாளையத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், கொடிசியா இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் மையத்துடன், சூலூரில் உள்ள விமானப்படையின் பழுதுநீக்கும் மையம், கொச்சியில் உள்ள கடற்படை கப்பல் பழுதுபார்ப்பு தளம் ஆகியவை கடந்த அக்டோபர் 28-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. தொடர்ந்து, ராணுவத் தேவைகளுக்கான பொருட்களைத் தயாரிக்க, கோவையைச் சேர்ந்த 3 நிறுவனங்களும், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனமும் கொடிசியா இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறும்போது, “புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 4 நிறுவனங்கள் தவிர்த்து, மேலும் 6 நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் இன்குபேஷன் மையத்தில், தங்களது தயாரிப்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம். அதற்குத் தேவையான 3-டி பிரிண்டர் போன்ற இயந்திரங்களை வாங்க உள்ளோம். அனைத்துவித பரிசோதனை வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட உள்ளன" என்றார்.

வீரர்களை வேறுபடுத்திக் காட்டும் கருவி

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களில், கோவை சூலூரை சேர்ந்த ஒரு நிறுவனம், சிறிய ரக ஆளில்லா பறக்கும் கண்காணிப்புக் கருவியை (ட்ரோன்) தயாரித்துள்ளது. அந்த நிறுவன மேலாண் இயக்குநர் நந்தகுமார் கூறும்போது, “இந்த ட்ரோன் மூலம் 10 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். 5,000 மீட்டர் உயரத்தில் பறந்தாலும், துல்லியமான படங்களை எடுக்க முடியும். ட்ரோன் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 65 சதவீதம் இங்கேயே தயாரிக்கப்பட்டவை. மேலும், எல்லையில் பணிபுரியும் நம் நாட்டு ராணுவத்தினர் மற்றும் அண்டை நாட்டு வீரர்களை வானிலிருந்து பார்க்கும்போது, இரு தரப்பினரையும் வேறுபடுத்திக் காட்டும் கருவியை இந்திய விமானப் படைக்கு அளிக்க உள்ளோம்" என்றார்.

சூரிய ஒளியில் இயங்கும் வாகனம்

சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை தயாரித்துள்ள, கோவை கணுவாய் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஆனந்தகுமார் கூறும்போது, "மலைகள், சேறான இடங்களில் இந்த வாகனத்தைப் பயன்படுத்தலாம். மின்சாரத்திலும் இது இயங்கும். மணிக்கு 60 கி.மீ. வேகத்தில், ஒரு டன் வரை எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். எல்லையில் எரிபொருளை மட்டுமே சார்ந்திருக்காமல் இருக்க இந்த வாகனம் உதவும். இந்த வாகனத்துக்கு பராமரிப்பு செலவே இருக்காது" என்றார்.

பழுது நீக்க ஆன்லைன் வழிகாட்டுதல்

தொலைதுாரத்தில் இருந்தபடி ‘ஆக்மண்டட் ரியாலிட்டி' மூலம் இயந்திரங்களை சரிபார்க்க, மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் வீடியோகால் மூலம் ஆலோசனை கூறும் ஒரு செயலியை உருவாக்கியுள்ள கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவன இயக்குநர் நம்பெருமாள் கூறும்போது, “இந்த செயலி வழியாக, தொலைதூரத்தில் பழுதாகி நிற்கும் ஒரு இயந்திரத்தையோ அல்லது வாகனத்தையோ, நிபுணரின் வழிகாட்டுதலை கேட்டுப் பெற்று, விரைவாக சரிசெய்ய முடியும். இதனால், நேரம் மீதமாகும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x