Published : 03 Dec 2020 03:16 AM
Last Updated : 03 Dec 2020 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி ஓராண்டுக்குள் 90 ஆயிரம் கால்நடைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

ஜோலார்பேட்டை அடுத்த கதிரிமங்கலம் கிராமத்தில் புதிய கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்து பேசும் அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உள்ளிட்டோர்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி ஓராண்டு காலத்துக்குள், ஏறத்தாழ 90 ஆயிரம் கால்நடைகள் பெண் பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித் தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி யில், ‘புதிய கால்நடை கிளை மருத்துவமனை’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசும்போது, "கதிரிமங்கலம் ஊராட்சியில் 1,171 கறவை பசுக்கள், 1,364 ஆடுகள், 950 கோழிகள் உட்பட மொத்தம் 3,901 கால்நடைகள் உள்ளன. இது தவிர கதிரிமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் 2,390 கால்நடைகள் உள்ளன.

இந்நிலையில், கால்நடை களுக்கு ஏதேனும் நோய் பிரச்சினை ஏற்பட்டால் இங்கிருந்து 8 கி.மீ., தொலைவுள்ள புதுப்பேட்டை கால்நடை மருத்தகம் அல்லது 9 கி.மீ., தொலைவுள்ள திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பொதுமக்கள் கால்நடைகளை கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனால், கதிரிமங்கலம் கிராமத்திலேயே புதிய கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) கதிரிமங்கலம் கிராமத்தில் புதிதாக கால்நடை கிளை மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கதிரிமங்கலம் கிராமம் மட்டுமின்றி சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்களும், அவர்களது கால்நடை களும் பயன்பெறும்.

திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியதில் இருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளன. பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித்திட்டபணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கிய ஓராண்டு காலத்துக்குள் 150 கறவை பசுக்கள், 11,760 ஆடுகள், 78,125 நாட்டு கோழிகள் என ஏறத்தாழ 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெண் பயனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் வந்தனாகர்க், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x