Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM

கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகனை விரைந்து செயல்பட்டு மீட்ட போலீஸார்

திருச்சி: திருச்சி கன்டோன்மென்ட் பகுதி வார்னர்ஸ் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரது 12 வயது மகன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த சிலர் சிறுவனை காரில் கடத்திச் சென்றதுடன், அவரது குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு, பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தினர். குறிப்பாக, சிசிடிவி கேமராவில் பதிவான குறிப்பிட்ட காரை தேடினர். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வயலூர் சாலையில் சோமரசம்பேட்டை பகுதியில் போலீஸார் வாகன சோதனை செய்வதைக் கண்டு ஒரு கார், மீண்டும் வந்த வழியாக திரும்பியது. இதைக் கவனித்த போலீஸார் மோட்டார் சைக்கிளில் அந்த காரை துரத்தினர். ராமலிங்க நகர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இரவு 10.30 மணியளவில் அங்கு சென்ற போலீஸார், காரை சோதனையிட்டபோது அதில் ஒரு சிறுவன் இருந்ததையும், அவர்தான் கடத்தப்பட்டவர் என்பதையும் அறிந்து மீட்டதுடன் காரை கைப்பற்றினர். கடத்தல் குறித்து கன்டோன்மென்ட் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x