Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் : மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வு குழு, கொலிஜியம் என்றழைக்கப்படுகிறது. இந்த குழுவில் தலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் கொலிஜியம் கூடியது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் கடந்த 17-ம் தேதி கொலிஜியம் கூடியது. இதில் மூத்த நீதிபதிகள் லலித், கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி 9 புதிய நீதிபதிகளை நியமிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி, மூத்த வழக்கறிஞர் நரசிம்ஹா ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவர். இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயரும்.

தற்போதைய தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு பதவி மூப்பின் அடிப்படையில் யு.யு.லலித் தலைமை நீதிபதியாக பதவியேற்று அடுத்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வரை பதவி வகிப்பார்.

அவரை தொடர்ந்து சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவியேற்று 2024 நவம்பர் 10-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். அவருக்குப் பிறகு சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாகி 2025 மே 13-ம் தேதி வரை பதவியில் இருப்பார். இதன் பிறகு பி.ஆர். கவாய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று 2025 நவம்பர் 23-ம் தேதி வரையும் அவருக்குப் பிறகு சூர்ய காந்த் தலைமை நீதிபதியாகி 2027 பிப்ரவரி 9-ம் தேதி வரையும் பதவி வகிக்க உள்ளனர்.

தற்போது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருக்கும் விக்ரம் நாத், சூர்யகாந்துக்குப் பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்பார். அவர் 2027 செப்டம்பர் வரை பதவியில் நீடிப்பார்.

முதல் பெண் தலைமை நீதிபதி

அவருக்குப் பிறகு பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாக ரத்னா தலைமை நீதிபதியாக பதவியேற்பார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார். எனினும் 36 நாட்கள் மட்டுமே அவர் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பார்.

ஒருவேளை விக்ரம் நாத் பரிந்துரை நியமனத்தை மத்திய அரசு ஏற்காவிட்டால், நாகரத்னா 2027 பிப்ரவரி 10-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று 2027 அக்டோபர் 29-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். நாக ரத்னாவுக்குப் பிறகு நரசிம்ஹா புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x