Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

பாஜகவில் இணைந்தார் திரிணமூல் காங்கிரஸ் தினேஷ் திரிவேதி :

தினேஷ் திரிவேதி

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் கடும் சவால் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக தலைவர்கள் தீவிர மாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மம்தாவின் தீவிர விசுவாசியாக இருந்த சுவெந்து அதிகாரி உட்பட சில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனிடையே நேற்று திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி தினேஷ் திரிவேதி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 70 வயதாகும் தினேஷ் திரிவேதி கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்து இருந்து விலகிய நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

திரிணமூல் முன்னாள் எம்பியும் பிரபல நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி, கொல்கத்தாவில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில், பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் திரிவேதி இணைந்தது குறித்து ஜே.பி.நட்டா கூறும்போது, “தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர் அவர். தற்போது சரியான கட்சிக்கு தினேஷ் திரிவேதி வந்துள்ளார்” என்றார்.

தினேஷ் திரிவேதி கூறும்போது, “நான் இந்த பொன்னான தருணத்துக்காக காத்திருந்தேன். சில கட்சிகளில் குடும்ப உறுப்பினர்கள்தான் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். ஆனால் பாஜகவில் மக்கள்தான் முக்கியமானவர்களாக உள்ளனர். கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடியின் மத்திய அரசு திறம்பட கையாண்டுள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் இருந்தபோது அதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்தது. அப்போது எம்.பி.யாக இருந்த தினேஷ் திரிவேதிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பொறுப்பு தரப்பட்டது.

6 பாஜகவினர் காயம்

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 6 பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர். திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த செயலைச் செய்ததாக தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x